செய்திகள்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை- மகளிர் விடுதி வார்டன் புனிதா போலீசில் வாக்குமூலம்

Published On 2018-08-04 23:29 GMT   |   Update On 2018-08-04 23:29 GMT
‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை:

‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் காவல் முடிந்து புனிதாவை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் கோவை பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு தங்கியிருந்த மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி அந்த விடுதியின் வார்டனான தண்ணீர் பந்தலை சேர்ந்த புனிதா (32) மீது புகார் கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி வார்டன் புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வார்டன் புனிதா கடந்த 1-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். புனிதாவை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் மாலை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புனிதாவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

புனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

விடுதி வார்டன் புனிதா மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி அழைத்தது இதுதான் முதல் முறை என்றும் இதற்கு முன்பு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜெகநாதன் இறந்ததை புனிதா செய்தித்தாள் மற்றும் டெலிவிஷனை பார்த்து தான் தெரிந்துகொண்டதாக கூறியுள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.

சரண் அடைவதற்கு முன்பு புனிதா சென்னையில் தான் தலைமறைவாக இருந்துள்ளார். ஜெகநாதன் இறந்த பின்னர் இனி போலீசாரிடம் இருந்து தப்ப முடியாது என்பதால் கோர்ட்டில் சரண் அடைந்ததாகவும், இந்த விவகாரத்தில் ஜெகநாதன் மற்றும் புனிதாவை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். என்றாலும் ஜெகநாதன் மரணம் குறித்தும், புனிதா தலைமறைவாக இருக்க உதவியவர்கள் பற்றியும், இந்த விவகாரத்தின் பின்னணி பற்றியும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

போலீஸ் காவல் முடிந்து புனிதாவை நேற்று மாலை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை தொடர்ந்து புனிதாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே காரணத்துக்காக கோவையில் மகளிர் விடுதி வார்டன் புனிதா போலீசில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News