செய்திகள்

சிபிஐயுடன், தொல்லியல் துறையும் இணைந்து செயல்படும்- அமைச்சர் பாண்டியராஜன்

Published On 2018-08-03 22:39 GMT   |   Update On 2018-08-03 22:39 GMT
கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் முயற்சியில் சி.பி.ஐ.யுடன் தொல்லியல் துறையும் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். #ministerpandiarajan
திருவள்ளூர்:

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு பொன்விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி, கலைப்பண்பாடு மற்றும் விளையாட்டு துறைகளின் வாயிலாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதற்கு தமிழ் ஆட்சிமொழி கலைப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1998-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள சிலைகளை அடையாளம் வைத்து அதற்கு ஒரு பதிவேடு உருவாக்கி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்திய தொல்லியல் துறையினர், தமிழக தொல்லியல் துறை சார்பில் 48 ஆயிரம் சிலைகளை ஆவணப்படுத்தும் பணியை கடந்த 2013-ம் ஆண்டில் முடித்தனர். 13 ஆயிரம் சிலைகள் ஆவணப்படுத்தப்படவில்லை என கூறுகின்றனர்.

எவ்வளவு சிலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை எங்கு உள்ளது, போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் ஒளிவு மறைவு இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஆவணப்படுத்தாத சிலைகள் உள்ளதா எனவும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். தற்போது சிலைகளை மீட்டு வரும் பணி சி.பி.ஐ.யிடம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் சிலைகளை தேடும் வேலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், உலக அளவிலும் நடக்கிறது. இதனை மத்திய அரசின் அமைப்பு செய்கிறது.

மத்திய அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டதால் தொல்லியல் துறை மூடப் பட்டது என அர்த்தம் கிடையாது. சிலைகள் மீட்கும் பணியில் சி.பி.ஐ.யுடன் இணைந்து தொல்லியல் துறையும் செயல்படும்.

சிலைகள் கடத்தப்பட்டது கோவில்கள் மட்டுமல்லாமல் அருங்காட்சியகத்திலும் நடந்துள்ளது. அதை நாங்கள் மீட்டுள்ளோம். சிலை மீட்பு பணிகளை சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின் தற்போது நேர்மாறாக கூறி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) திவ்யஸ்ரீ, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமா, கலைப்பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குனர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerpandiarajan
Tags:    

Similar News