செய்திகள்

கிரண்பேடி அரசியல்வாதி போல் செயல்படுவதை நிறுத்த வேண்டும்: நாராயணசாமி பேட்டி

Published On 2018-07-27 10:14 GMT   |   Update On 2018-07-27 10:28 GMT
மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுவதற்கு கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். #kiranbedi #narayanasamy

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

நடந்த முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தவிர அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தினோம்.

அதுபோல் துணை ஜனாதிபதி உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக பேசினோம். அவர்கள் அனைவரும் புதுவைக்கு மாநில அஸ்தஸ்து பெற்று தருவதாக உறுதி அளித்தனர்.

டெல்லி பயணம் வெற்றி என கூற முடியாவிட்டாலும் திருப்திகரமாக அமைந்தது. மாநில அந்தஸ்தை பெற்றால் மட்டுமே வெற்றி என்று கூற முடியும்.

புதுச்சேரியில் 4 பிராந்தியங்களான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றை ஒருங் கிணைத்துதான் மாநில அந்தஸ்து கேட்டுள்ளோம். இதில், எந்தவொரு பிராந்தியத்தையும் மற்றொரு மாநிலத்துடன் சேர்த்து மாநில அந்தஸ்து அளித்தால் அதனை ஏற்க மாட்டோம்.

புதுவைக்கு மத்திய அரசு போதிய நிதி அளிக்காததாலும் மத்திய நிதி கமி‌ஷனில் புதுவை சேர்க்கப்படாததாலும் புதுவை மாநில நிதி ஆதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் மாநில அந்தஸ்து பற்றி கவர்னர் கிரண்பேடி கூறிய கருத்து குறித்து நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

அவரவர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். கவர்னர் கிரண்பேடி என்ன அரசியல்வாதியா? மாநில மக்களின் விருப்பத்தை டெல்லியில் கூறி உள்ளோம்.

மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவர் அரசியல்வாதி என்றால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News