செய்திகள்

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர கமல்ஹாசனை ஆதரிக்க வேண்டும்: நடிகை ஸ்ரீபிரியா பேச்சு

Published On 2018-07-23 16:40 GMT   |   Update On 2018-07-23 16:40 GMT
தமிழகத்தில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கமல்ஹாசன் தருவார் என்று கடலூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா பேசினார். #kamal #actresssripriya

கடலூர்:

கடலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. கூட்டத்தில் நடிகையும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீபிரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர்களுக்கு என்ன தெரியும் என்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கலைத்துறையில் இருந்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை.

மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார். மாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க மாட்டோம். உண்மையான அரசியல்வாதியாக கமல்ஹாசன் இருப்பார். தமிழ்நாட்டில் மக்களுக்கு மறதி அதிகம் உள்ளது. கொள்ளையடித்தவரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் சிந்தித்து செயல்பட முடியும். மாற்றம் தேவை, அது யார்? என்பதை சிந்தித்து, நம்மவருக்கு (கமல்ஹாசன்) வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்துவது, பெண்களை அதிக அளவில் கட்சியில் சேர்ப்பது, படித்த இளைஞர்கள், மகளிரணியை வைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, வாரத்தில் ஒரு நாள் சுகாதார பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. ஆட்சி அதிகாரம் சரியில்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்களுக்கு எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து விட்டது. சமீபத்தில் குட்கா ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தமிழகத்தில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கமல்ஹாசன் தருவார்.

இவ்வாறு அவர் கூறினார். #kamal #actresssripriya

Tags:    

Similar News