செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்: எர்ணாவூர் நாராயணன் பேட்டி

Published On 2018-07-23 13:21 GMT   |   Update On 2018-07-23 13:21 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #dmk #ernavoornarayanan

தென்காசி:

சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசி சவுந்தர்யா மகாலில் நேற்று நடந்தது. கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் தனுஷ்கோடி, பொதுச்செயலாளர் சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், துணை பொதுச்செயலாளர் இளஞ்சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அகரக்கட்டு லூர்து நாடார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக எர்ணாவூர் நாராயணன் உள்பட பழைய நிர்வாகிகளே மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கூட்டத்தில், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். தென்னையில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி அளித்ததுபோல் பனையில் இருந்தும் நீரா பானம் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்திட தாமிரபரணி தூய்மை திட்டம் தொடங்க வேண்டும்.

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கடலோர மீனவர்கள் நலன் காக்க சாகர்மாலா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். சென்னை- கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை திட்டத்தை உடனே நிறைவேற்றி கூடுதல் ரெயில்கள் விட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தோம். அதில் இருந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். மக்கள் பிரச்சினைக்காக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்துகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறோம். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள லோக் ஆயுக்தா சட்டம் பெயரளவில் மட்டுமே உள்ளது. அதில் விதிமுறைகளை திருத்தம் செய்து வலுவான அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். வருமான வரி சோதனை நடத்தும்போது பல கோடி ரூபாய் கைப்பற்றப்படுகிறது. அதன்பிறகு அந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பது யாருக்கும் தெரிவது இல்லை. எனவே அந்த வழக்கின் விவரத்தை அடிக்கடி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை -சேலம் 8 வழிச்சாலை பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறுகிறார். அப்படி அங்கு எந்த பணியும் நடந்ததாக தெரியவில்லை. அங்குள்ள மக்களின் கருத்தை கேட்டு அதன்படி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்தி தமிழக அரசை மிரட்டி வருகிறது. பாராளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது ஆகும். சரக்கு சேவை வரியால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே அந்த வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நடிகர்கள் இனி ஆட்சிக்கு வரமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News