செய்திகள்

வருமான வரி சோதனை: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்- இல.கணேசன் பேட்டி

Published On 2018-07-19 14:50 GMT   |   Update On 2018-07-19 14:50 GMT
வருமான வரித்துறை சோதனையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ilaganesan #incometaxraid

சேலம்:

சேலம் மரவனேரியில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல.கணேசன் எம்.பி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆடிட்டர் ரமேஷ் அவருக்காக வாழாமல் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். இவர் பண்பு, பணிவு குணத்தோடு வாழ்ந்தவர். இறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்து அவர் உடலை எடுத்து செல்லும் போது பொதுமக்கள் கதறி அழுதனர், அதை நான் நேரில் பார்த்தேன். அவர் உண்மையான தொண்டனாக இருந்தார். அவருடன் இருந்த நிர்வாகிகளுக்கு அவர் விட்டுச்சென்ற பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன். 5 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் வேதனை அளிக்கிறது என்னவென்றால் கொலையாளிகளை தேடும் முயற்சி, தண்டனை வழங்கும் முயற்சியும் முழுமை பெறவில்லை.

இது போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். வருமான வரி ரெய்டு என்பது பாராட்டுக்குரியது. யார் தவறு செய்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் தவறு உண்மை என்றால் அவர்கள் மீது நீதி மன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.

சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. பாலியல் குற்றங்கள் குறைய கடுமையான சட்டம் ஏற்ற வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், முருகேசன், அண்ணாதுரை, எஸ்.சி. எஸ்.டி பிரிவு செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #ilaganesan #incometaxraid

Tags:    

Similar News