செய்திகள்

நகை பறிப்பவர்களை பிடித்து கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு: கனகராஜ் எம்எல்ஏ அறிவிப்பு

Published On 2018-07-18 03:53 GMT   |   Update On 2018-07-18 03:53 GMT
சூலூர் தொகுதியில் நகை பறிப்பவர்களை பிடித்து கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கனகராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

சூலூர்:

சூலூர் பகுதியில் அடிக்கடி வீடுகளில் திருட்டு, நகைபறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இதில் அங்கிருந்த இலவச சீருடைகள், காலணிகள் எரிந்து நாசமாயின. இதனால் இந்த பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பெற்றோர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், அந்த பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் நடமாடி வருவதாக சூலூர் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ், பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், தீப்பிடித்து எரிந்த அறைகளுக்கு சென்ற அவர், சூலூர் வட்டார கல்வி அதிகாரி நேசமணியிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், சூலூர் தொகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடித்து தந்தாலோ அல்லது உரிய தகவல் தெரிவித்தாலோ அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசும், சங்கிலி பறிப்பு குற்றவாளிகளையும், நகைகளையும் மீட்கும் போலீசாருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக கொடுப்பேன்.

மேலும், தீயினால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு என் சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் தரப்படும். பள்ளியின் அனைத்து பராமரிப்பு பணிகளுக்கு ஆகும் தொகையை, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையுடன் இணைந்து அரசிடம் கேட்க ஆவன செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News