செய்திகள்
மேல்மிடாலத்தில் கடல் சீற்றம் காரணமாக அலைகள் சீறி எழுந்த காட்சி.

குமரி மாவட்டத்தில் பயங்கர கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2018-07-17 06:05 GMT   |   Update On 2018-07-17 06:05 GMT
குமரி மாவட்டத்தில் பயங்கர கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடித்தது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர கடல் சீற்றம் காணப்படுகிறது.

இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் கடல் அரிப்பும் ஏற்பட்டது.

மேல் மிடாலம் பகுதியில் அலை தடுப்பு சுவர்கள் இல்லாததால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டது. எனவே இங்கு உடனடியாக அலை தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை மீனவர்கள் வள்ளம், கட்டுமரங்கள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு பிற்பகலுக்குள் கரை திரும்பிவிடுவார்கள்.

ஆனால் கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்றும் இதே நிலை நீடித்தது.

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் மீன்களின் வரத்து குறைந்தது. இதனால் மீன் மார்க்கெட்டுகள் வெறிச் சோடியது. வியாபாரிகளும் மீன்கள் வாங்கி செல்ல வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கன்னியாகுமரியில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டியது. இதனால் கரையில் இருந்த மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர். மேல் மிடாலம் பகுதியிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களின் மீன் பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரியில் கடற்கரையில் சுற்றுலா போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அவர்கள் கடலில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

கடல் சீற்றம், மற்றும் அலைகளின் கொந்தளிப்பை கூறி யாரும் கடலில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். இதனால் கடலில் குளிக்கும் ஆசையுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News