செய்திகள்
குன்னூர் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இலவச வேட்டி- சேலையில் தயாரான துணிப்பைகள்.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை எதிரொலி - குன்னூரில் இலவச வேட்டி, சேலையில் துணிப்பை விற்பனை

Published On 2018-07-14 14:31 IST   |   Update On 2018-07-14 14:31:00 IST
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குன்னூர் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இலவசமாக வேட்டி, சேலைகளில் தைக்கப்பட்ட துணி பைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். #Plasticban
குன்னூர்:

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மளிகை, ஜவுளி உள்ளிட்டவைகள் வாங்க பைகள் இன்றி பொதுமக்கள் அவதியடைந்தனர்.

காட்டன் துணியால் துணிப்பைகள் தயாரிக்க ரூ.10 முதல் ரூ.16 வரை செலவாகிறது. இதனால் இவைகளை வாங்க, விற்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் குன்னூர் மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் தமிழக அரசு பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் தைக்கப்பட்ட துணி பைகளை விற்பனைக்கு மாட்டி வைத்துள்ளனர். இந்த பைகள் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ரேசன் கடைகளில் மக்கள் வாங்காமல் தேங்கி கிடைக்கும் இலவச வேட்டி- சேலைகளை கள்ள மார்க்கெட்டில் வாங்கி பைகளாக விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் இலவச வேட்டி, வேலைகள் பைகளாக தயாரித்து விற்பனைக்கு வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Plasticban

Tags:    

Similar News