செய்திகள்
செல்வகுமார்

கல்லூரி நிர்வாகம் -பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணவியின் அண்ணன் கண்ணீர் பேட்டி

Published On 2018-07-13 09:43 GMT   |   Update On 2018-07-13 09:55 GMT
முன்னேற்பாடு, உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை:

பேரிடர் மேலாண்மை ஒத்திகையின் போது மாடியில் இருந்து விழுந்து இறந்த மாணவி லோகேஸ்வரி அண்ணன் செல்வகுமார் கண்ணீர் மல்க கூறியதாவது-

எனது தங்கை மாடியில் இருந்து விழுந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

எனது தங்கையின் தோழி பவித்ராவின் தந்தை சக்திவேல் தான் எனது போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் தங்கை மாடியில் இருந்து விழுந்து பலத்த காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

நாங்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போது எனது தங்கை இறந்து விட்டதாக கூறினார்கள்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் மீது ஆலாந்துறை போலீசில் புகார் செய்து உள்ளோம். எனது தங்கை மரணத்துக்கு உண்மையான காரணம் தெரிய வேண்டும். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம், பயிற்சியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னேற்பாடு, உரிய பாதுகாப்பு இல்லாமல் பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி லோகேஸ்வரி அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். அவர் இறந்த சம்பவம் குடும்பத்தினர் மட்டுமின்றி ஆலாந்துறை பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு இருந்த அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் சோகத்துடன் திரண்டு இருந்தனர். #CoimbatoreStudent #Logeshwari
Tags:    

Similar News