செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற முட்டை நிறுவன காசாளருக்கு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2018-07-09 04:59 GMT   |   Update On 2018-07-09 04:59 GMT
வருமான வரித்துறையினரின் விசாரணையின் போது தற்கொலைக்கு முயன்ற முட்டை நிறுவன காசாளருக்கு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை விநியோகம் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த நிறுவனத்தில் காசாளர் கார்த்திகேயன் (வயது 32) என்பவரிடம் அதிகாரிகள் பின் பக்கம் உள்ள வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் தண்ணீர் குடித்து வருவதாக கூறிவிட்டு சென்றார். திடீரென வீட்டில் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காயங்களுடன் உயிருக்கு போராடிய கார்த்திகேயனை அதிகாரிகள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கார்த்திகேயன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். #EggNutritionCorruption
Tags:    

Similar News