செய்திகள்

திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Published On 2018-07-06 15:49 IST   |   Update On 2018-07-06 15:49:00 IST
திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

திருப்போரூர்:

திருப்போரூர் தெற்கு மாடவீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.

சார்பதிவாளராக சம்பத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் குடும்ப செட்டில்மென்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட ஒருசில ஆவணங்கள் பதிவுசெய்ய அதிக பணம் வசூல் செய்யப்படுவதாகவும், மேலும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி ஆவணம் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும், பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ஆலந்தூர் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தின் உள்ளே ஆவணங்கள் வைக்கும் அறையில் கட்டுகட்டாக பணம் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் சார்பதிவாளரிடம் விசாரணை செய்தனர். மேலும் பதிவு செய்த ஆவணங்களின் கணக்குகளை சரிபார்த்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1 மணிக்கு முடிந்தது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 3 லட்சத்து 92 ஆயிரத்தை லஞ்சஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது லஞ்சப்பணமா? என்பது குறித்து சார்பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டு மூலமாக கருவூலத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது.

கடந்த மாதம் 5-ந் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது சார்பதிவாளர் அலுவலக சோதனையில் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “கணக்கில் காட்டப்படாத பணம் குறித்து கோர்ட்டில் விசாரணை நடைபெறும். மேலும் அவர்களுடைய துறை ரீதியாகவும் விசாரணை நடைபெறும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு அவர்கள் கணக்கு காட்டப்படவில்லையென்றால் லஞ்சப் பணமாக கருதப்படும்” என்று கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது சார்பதிவாளர் சந்திரா, உதவியாளர் சோலைமுத்து ஆகியோரிடம் இருந்தும் மற்றும் அலுவலக மேஜை டிராயரில் இருந்தும் கட்டுக்கட்டாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 730 ரூபாய் சிக்கியது.

இந்த பணத்துக்கு அவர்கள் உரிய கணக்கு காட்டாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். #Tamilnews

Tags:    

Similar News