செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த ரசாயனங்கள் டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட காட்சி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2-வது நாளாக ரசாயனங்கள் அகற்றும் பணி

Published On 2018-07-03 14:08 IST   |   Update On 2018-07-03 14:08:00 IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று 6 டேங்கர் லாரிகள் மூலம் 120 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இன்று 2-வது நாளாக கந்த அமிலம் மற்றும் மற்ற ரசாயனங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது கடந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் 28-ந் தேதி மூடப்பட்டது.

இந்நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த டேங்கில் இருந்து கந்தக அமிலம் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து கடந்த 18-ந் தேதி தொடங்கி 7 நாட்களாக 2,124 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஆலையில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எரிவாயு (எல்.பி.ஜி.), டீசல், தாமிர தாது, ஜிப்சம், திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட ரசாயனங்களை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆலையில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வு விவரம் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஆலையில் உள்ள அனைத்து ரசாயனங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு அரசு உத்தரவிட்டது. இந்த ரசாயனங்களை அகற்றுவதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் உதவி கலெக்டர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் லிவிங்ஸ்டன் மற்றும் தீயணைப்பு துறை, தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் நேற்று ஆலையில் மீண்டும் ஆய்வு செய்தனர். இதையடுத்து ரசாயனங்களை அகற்றும் பணிநேற்று மாலை தொடங்கப்பட்டது. ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் ஜெனரேட்டர் மூலமே மின்வசதி செய்யப்பட்டு ரசாயனங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக கந்தக அமிலம் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 6 டேங்கர் லாரிகள் மூலம் 120 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இன்று 2-வது நாளாக கந்த அமிலம் மற்றும் மற்ற ரசாயனங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.

டேங்கர் லாரிகள் கிடைக்காததால் காலையில் பணிகள் சற்று தாமதமானது. இதையடுத்து கூடுதலாக டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு ரசாயனங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிக்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெளியேற்றப்படும் ரசாயனங்கள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மூலம் அவர்களிடம் இருந்து ஏற்கனவே பொருட்களை வாங்கும் நிறுவனத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இதற்கான செலவுகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News