செய்திகள்

காவிரி ஆணையத்தை செயல்படுத்த தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2018-07-01 16:14 IST   |   Update On 2018-07-01 16:14:00 IST
காவிரி ஆணையத்தை செயல்படுத்த தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan #CauveryManagmentCommission

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்திய பா.ஜ.க. அரசும், உச்சநீதி மன்றமும் இனியும் காலதாமதம் செய்யாமால் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக முறைப்படி செயல்படுத்தி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பங்கிட்டு வழங்க வேண்டும்.


கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதி மன்றம் செல்ல இருப்பதும், நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத்தில் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக குரல் எழுப்பி போராட இருப்பதும் அநியாயத்தின் உச்சக்கட்டம்.

எனவே தமிழக அரசு இனியும் பொறுமைகாக்காமல் உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வற்புறுத்த வேண்டும்.

மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த கர்நாடக அரசு எந்தவிதத்திலும் இடையூறாகவோ, தடங்கலாகவோ, தடையாகவோ இருக்கக் கூடாது என்பதை உறுதியாக கூற வேண்டியது மத்திய அரசின் கடமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GKVasan #CauveryManagmentCommission

Similar News