செய்திகள்

2½ வயது குழந்தைக்கு டிக்கெட்டா?: அரசு பஸ் கண்டக்டரிடம் குழந்தையை விட்டு சென்ற தந்தை

Published On 2018-06-27 22:43 IST   |   Update On 2018-06-27 22:43:00 IST
டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பஸ் கண்டக்டரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டு சென்ற சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரளம்:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர் நேற்று தனது 2½ வயது குழந்தையுடன் சீனிவாசபுரத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ்சில் பணிபுரிந்த கண்டக்டரிடம் திருவாரூருக்கு ஒரு டிக்கெட் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு கண்டக்டர், உங்கள் குழந்தைக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இதயத்துல்லா, தனது குழந்தைக்கு 2½ வயது தான் ஆகிறது. எனவே டிக்கெட் எடுக்க தேவையில்லை என்று கூறினார்.

ஆனால் கண்டக்டரோ, குழந்தைக்கு 2½ வயது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எனவே டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்று விடாபிடியாக கூறினார். இதனால் இதயத்துல்லாவுக்கும், கண்டக்டருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த இதயத்துல்லா, எனது குழந்தைக்கு 2½ வயது என்பதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். இருங்கள்... எனது பிறப்பு சான்றிதழை கொண்டு வருகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இதயத்துல்லா அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது தனது குழந்தையை கண்டக்டரிடம் கொடுத்து விட்டு குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்து வருகிறேன் என கூறி பஸ்சை விட்டு கீழே இறங்கி சென்று விட்டார். பின்னர் அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் ஏறி தனது வீட்டுக்கு சென்றார்.

இதயத்துல்லாவின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பஸ் கண்டக்டர், அந்த குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவித்தார். பின்னர் அவர் அந்த குழந்தையை பேரளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற இதயத்துல்லா, தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்துக் கொண்டு அடுத்த பஸ்சில் ஏறி பேரளத்துக்கு வந்தார்.

பேரளம் போலீஸ் நிலைய வாசலில் கூட்டமாக இருப்பதை கண்ட இதயத்துல்லா அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தனது குழந்தை இருப்பதை பார்த்ததும் நடந்த சம்பவத்தை தெரிவித்து தனது குழந்தையை வாங்கி சென்றார்.

சுமார் 2 மணி நேரம் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அந்த குழந்தை இதயத்துல்லாவிடம் ஒப்படைத்தனர்.

டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பஸ் கண்டக்டரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டு சென்ற சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News