செய்திகள்
விசாரணைக்கு வந்த முன்னாள் கோவில் அதிகாரிகள்.

சிலைமோசடி விவகாரம் - பழனி கோவில் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை

Published On 2018-06-26 05:34 GMT   |   Update On 2018-06-26 05:55 GMT
பழனி கோவில் சிலை மோசடியில் முன்னாள் இணை, துணை ஆணையர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் வந்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி:

பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாண சிலை சேதம் அடைந்ததாக கூறி ஐம்பொன்னால் ஆன புதிய சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை அமைத்ததில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு கோவில் இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த சிலை மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக நகை மதிப்பீட்டாளர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர்.

மேலும் டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கோவிலில் பணியாற்றிய பல்வேறு அதிகாரிகள், ஊழியர்கள், குருக்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் பழனி மலைக்கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள சிலைகள், அவற்றின் உண்மை தன்மை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.

சிலை மோசடியில் தொடர்புடைய முன்னாள் ஆணையர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளார். இந்நிலையில் டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் இன்று மீண்டும் பழனி கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் இதற்கு முன் கோவில் இணை மற்றும் துணை ஆணையர்களாக பணியாற்றி வந்த அசோக், பாஸ்கரன், ராஜமாணிக்கம், சுதர்சன், மங்கையற்கரசி, மேனகா ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

இதில் முன்னாள் உதவி ஆணையர் மேனகா கோவையிலும், மங்கையற்கரசி ராமேஸ்வரம் கோவிலிலும் பணிபுரிந்து வருகின்றனர். மற்ற அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

இவர்கள் பணிபுரிந்த காலங்களில் எந்தெந்த சிலைகள் புனரமைக்கப்பட்டது. புதிதாக வரவழைக்கப்பட்டதா? கும்பாபிஷேக விழா குறித்து நடந்த சர்ச்சை, சிலைகள் ஒப்படைப்பு செய்யப்பட்டபோது அதன் உறுதி தன்மை ஆராயப்பட்டதா? என கிடுக்கிபிடி கேள்விகள் கேட்கப்பட்டது. விசாரணை குறித்து அவர்கள் அனைவருக்கும் முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டதால் இன்று பழனி வந்திருந்தனர்.

பழனி விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனால் சிலை மோசடியில் அடுத்து சிக்கப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags:    

Similar News