செய்திகள்

கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதில் தவறு இல்லை- அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

Published On 2018-06-24 10:49 GMT   |   Update On 2018-06-24 10:54 GMT
கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதில் தவறு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterPandiarajan

சென்னை:

கவிஞர் கண்ணதாசன் 92-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

தமிழக கவர்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது தமிழக அரசின் பணிகள், திட்டங்களை வலுப்படுத்துவது மாதிரிதான் உள்ளது.

எந்த இடத்திலும் நாங்கள் தவறு செய்ததாக கவர்னர் சொல்லவில்லை. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிகாரிகள் அளவில் அவர் ஆய்வு செய்வது எங்களை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் தி.மு.க.வினர் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் தேவையில்லாதது. சட்டரீதியாகவும் சரி கிடையாது. தார்மீக ரீதியாகவும் சரி கிடையாது. கவர்னர் ராஜ்பவனில் இருந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு.

அரசியல் சாசன சட்டப்படி அவருக்கு உள்ள கடமையை அவர் செய்கிறார். தூய்மை இந்தியா திட்டம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல கவர்னர் செயல்படுகிறார்.

முன்னாள் கவர்னர் சென்னாரெட்டியை மாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு காரணம் வேறு. அந்த உதாரணம் இந்த கவர்னருக்கு பொருந்தாது.

சென்னாரெட்டி அரசின் திட்டங்களை எதிர்த்தார். இதனால் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போதைய கவர்னர் நெகட்டிவ் ஆக எதுவும் சொல்லவில்லை. எங்களை ஊக்கப்படுத்தி தான் வருகிறார்.

பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. உண்மை நிலவரத்துக்கும், அவர் சொல்வதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி இருக்கிறோம்.

தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினாலும் முடிந்தவரை வன்முறைகள் இல்லாத நிலைவரை அனுமதிக்கிறோம். ஒரு வருடத்தில் 27 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக போராட்டம் தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிறது.

எம்.ஜி.ஆர். காலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரும்புகரம் கொண்டு ஒடுக்கினார். அந்த நாளில் இருந்து நக்சலைட்டுகள் தலைதூக்க விடாமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்,

நெல்லூரில் இருந்து நேபாளம் வரை நக்சலைட்டுகள் பரவி இருந்த நிலையிலும் தமிழகத்தில் அவர்களால் தலைவைத்து படுக்க முடியவில்லை. இப்போது கூட முளையிலேயே கிள்ளி எறிந்ததால் தமிழகம் அமைதியாக திகழ்கிறது.

பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. இது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உண்மைக்கு மாறாக அவர் கூறி வருகிறார்.

சேலம்-சென்னை பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விட நன்மைகள்தான் அதிகம். இதில் எவ்வளவு நிலங்கள் சாலைக்காக எடுக்கப்பட உள்ளது போன்ற விபரங்களை ஏற்கனவே முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan

Tags:    

Similar News