செய்திகள்

காவிரி போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2018-06-22 13:13 IST   |   Update On 2018-06-22 13:13:00 IST
காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி பிரமுகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். #cauveryissues
சென்னை:

காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசை தாக்கிய வாலிபர் யார்? என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதனை தொடர்ந்து வீடியோ காட்சியை வைத்து அந்த நபர் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

எண்ணூர் திலகர் நகர் பகுதியை சேர்ந்த மதன்குமார் (23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் கடந்த மாதம் 31-ந்தேதி போலீசில் சிக்கினார். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

மதன்குமார் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மதன்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஐ.பி.எல். போராட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீசார் மேலும் பலரை தேடி வருகிறார்கள். #cauveryissues
Tags:    

Similar News