செய்திகள்

வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூரிய மின்வேலியை அகற்ற வேண்டும்- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-06-22 03:45 GMT   |   Update On 2018-06-22 03:45 GMT
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூரிய மின்வேலியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் பேராசிரியர் முருகவேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதியை சட்டவிரோதமாக சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை நாசப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக சூரிய மின்சார வேலியையும் அமைத்துள்ளனர். இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்துவிடுகிறது. எனவே சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும், சூரிய மின்வேலியையும் அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘சூரிய மின்வேலியினால் ஒரு யானை கூட இதுவரை இறக்கவில்லை’ என்று வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், 10 கிலோ வாட் மின்சாரம் பாயும் சூரிய மின்வேலியால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா? என்று கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வனத்துறை எவ்வளவோ முயற்சித்தும், அது தோல்வியில் முடிந்துள்ளது. விவசாயம் மட்டுமின்றி சவுடு மணல் அள்ளும் குவாரிகளும் இருக்கிறது. மணலை எடுத்துச்செல்லும் லாரிகளால் விலங்குகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அனைத்து நடவடிக்கையும் தொடர்ந்து எடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சூரிய மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த பகுதி சத்தியமங்கலம் காட்டில் ஒரு பகுதியாகவும், யானை வழித்தடமாகவும் உள்ளது. எனவே விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள சூரிய மின்வேலியை உடனடியாக அதிகாரிகள் அகற்றவேண்டும். வழக்கு விசாரணையை ஜூலை 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News