செய்திகள்

மதுரைக்கு எய்ம்ஸ் வந்து விட்டதால் எனது பதவி காப்பாற்றப்பட்டு விட்டது- அமைச்சர் உதயகுமார்

Published On 2018-06-21 09:11 GMT   |   Update On 2018-06-21 09:11 GMT
மதுரைக்கு எய்ம்ஸ் வந்து விட்டதால் எனது பதவி காப்பாற்றப்பட்டு விட்டதாக திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
மதுரை:

காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழகத்தில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட நாள் முதல், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆசியுடன் எய்ம்ஸ் மதுரையில் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து போராடி வந்தது.

மேலும், மதுரையில் எய்ம்ஸ் அமையாவிட்டால் எனது அமைச்சர் பதவியைக் கூட துறக்கத் தயார் என பல பொதுக்கூட்டங்களில் நான் பேசினேன்.

மத்திய அரசு தமிழகத்தில் மதுரை, தஞ்சை என 5 இடங்களில் எய்ம்ஸ் அமைக்க இடத்தை ஆய்வு மேற்கொண்டு இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கு அனைத்து வசதிகளும் நிறைந்த இடமாக உள்ளது என தீர்மானித்து, தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க ஆணை பிறப்பித்ததை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் ஆணையை வெளிப்படுத்தியது மேலும், இங்கு அமைக்க 5 நிபந்தனை ( குடிநீர், மின்சாரம், தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடமாகவும், நில மீட்பில் சிக்கலின் மை உள்ளிட்ட )களையும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கெல்லாம் உகந்த இடமாக மதுரை தோப்பூர் அமைந்துள்ளது. இதனால் இனி பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை. எனது அமைச்சர் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.

இந்த மருத்துவமனை அமைந்தால், ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையால், தமிழகத்தில் கடைக்கோடியில் இருப்பவர்களும் இங்கு வந்து எளிதில் பயன்பெறும் வகையில் அமையும்.

மேலும், சேலம் சென்னை 8 வழிச்சாலையால் எந்த ஒரு விவசாயிக்கும் பாதிப்பு இருக்காது, விவசாயிகளுக்கு பாதுகாப்பும் அவர்களது வளர்ச்சிக்கும் என்றென்றும் உறுதுணையாக அ.தி.மு.க. செயல்பட்டு வரும். சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் சுயநலத்திற்காகவும் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். அது எடுபடாது.

சேலம் சென்னை 8 வழிச்சாலை அமைந்தால் ஒரு உயிர் கூட விபத்தில் பலியாகாது என்பதை, சேலம் மக்களுக்கு சத்தியம் செய்கிறேன். மேலும், மதுரை மாவட்டத்திற்கு பஸ்போர்ட் அமைப்பதற்கு முதலிடம் வகிப்பது திருப்பரங்குன்றம் தொகுதி. அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுரையில் பறக்கும் சாலை திட்டமும் வெகு விரைவில் வருவதற்கு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இது போன்ற வியக்கத்தக்க திட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், இதனால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், நீதிபதி, மாணிக்கம், பெரிய புள்ளான், நிர்வாகிகள் வெற்றிவேல், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பன்னீர்செல்வம், முத்துக்குமார், முனியாண்டி, மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News