சிவகங்கை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் - பாண்டியராஜன்
மதுரை:
மதுரைக்கு விமானம் மூலம் வந்த அமைச்சர் மாபா. பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த இரண்டு மாதமாக 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்துள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தொண்மையாக பொருட்கள் கிடைத்துள்ளன.
ஆய்வில் தங்க ஆபரணம் கிடைத்துள்ளது. புதையல் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் கிடைத்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து விரிவான அறிக்கை வருகிற 25-ந்தேதி சட்டமன்றத்தில் வெளியிடப்படும்.
கீழடியை விட திருவள்ளூரில் கற்கால ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆதிச்சநல்லூர், கீழடி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பொருட்களை வைத்து ரூ. 14 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ரூ. 50 லட்சம் செலவில் ஆய்வு மையம் உருவாக்கி உலகத் தரம்மிக்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan