செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் லாரிகள் ஓடின

Published On 2018-06-18 10:15 GMT   |   Update On 2018-06-18 10:15 GMT
இன்று நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறினார்.
ஈரோடு:

டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். 3-வது நபர் காப்பீட்டு தொகையை 30 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.

அதன்படி நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.

ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறியதாவது.-

பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்த்தப்படுவதால், சரக்கு லாரிகள் நஷ்டத்தை சந்திக்கின்றன. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவற்றின் விலையை உயர்த்த வேண்டும்.

தேசிய அளவில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, ஒரே தொகையாக பெற வேண்டும்.

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் ஜீலை 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தில் அங்கத்தினர் என்ற முறையில் தாங்களும் பங்கேற்கிறோம்.

எனவே இன்று நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு நரிப்பள்ளம் ஓடை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் அந்தந்த பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும்.

அதே போன்று இன்று நரிப்பள்ளம் ஓடையில் இருந்து லாரிகள் வழக்கம் போல் இயங்கின.

Tags:    

Similar News