செய்திகள்

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது - சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

Published On 2018-06-16 07:45 GMT   |   Update On 2018-06-16 07:45 GMT
வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அங்கு படகு சவாரி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி படகு சவாரியை தொடங்கி வைத்தார்.
தென்காசி:

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இன்று காலை நிலவரப்படி பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 71.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.91 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.30 அடியாகவும் உள்ளன. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 880 கன அடி தண்ணீரும், சேர்வலாறு அணைக்கு 587 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணைக்கு 205 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாகவே சீசன் களை கட்டியுள்ளது. ஜில்லென்ற காற்றும், சாரலும் குற்றாலத்தை குதூகலமாக்கி உள்ளன. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நாளுக்கு நாள் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று காலை குற்றாலத்தில் நல்ல மழை பெய்தது.

தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. சுற்றுலா பயணிகள் காலையில் இருந்தே அதிகளவில் வர தொடங்கினர். மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் அலைமோதினார்கள். ஏராளமானோர் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளம் நிரம்பியது.

இங்குள்ள படகு குழாமில் ஆண்டுதோறும் குற்றாலம் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அங்கு படகு சவாரி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி படகு சவாரியை தொடங்கி வைத்தார்.

இங்கு 29 படகுகள் உள்ளன. 4 இருக்கைகள் கொண்ட 16 பெடல் படகுகளும், 2 இருக்கைகள் கொண்ட 4 பெடல் படகுகளும், 5 துடுப்பு படகுகளும், ஒருவர் மட்டும் செல்லக்கூடிய கயாக் வகையை சேர்ந்த 4 துடுப்பு படகுகளும் சுற்றுலா பயணிகள் சவாரிக்காக உள்ளது. படகு சவாரிக்கு அரை மணி நேரத்துக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படுகிறது. 4 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.150ம், 2 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.120ம், துடுப்பு படகுக்கு ரூ.185ம், கயாக் வகை படகுக்கு ரூ.95ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. படகில் செல்பவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து உற்சாகமாக படகில் சென்றனர்.
Tags:    

Similar News