செய்திகள்

தகுதி நீக்க வழக்கில் நிலைப்பாடு என்ன?- டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருத்து

Published On 2018-06-16 11:36 IST   |   Update On 2018-06-16 11:36:00 IST
தகுதி நீக்க வழக்கில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஒதுங்கப்போவதாக கூறியுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAs
சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது. எனவே, வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக இன்னும் சில காலம் ஆகும்.

இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்,  சபாநாயகர் உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார். தனது தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து, அதன்மூலம் பொதுமக்களும் பயன் அடைவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இது தங்க தமிழ்ச் செல்வனின் தனிப்பட்ட விருப்பம் என்றும், மற்ற 17 எம்எல்ஏக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்): தங்கதமிழ்ச்செல்வன் முடிவுக்கு டி.டி.வி. தினகரன் என்ன கருத்து கூறியிருக்கிறாரோ அதுதான் எனது கருத்து. புதுச்சேரி சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும் இருப்பது நீதித்துறை மாண்பு கேள்விக்குறியாகி உள்ளது. எங்களது பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்): தகுதி நீக்கம் தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த வழக்கில் புதுவைக்கு ஒரு விதமாகவும், தமிழகத்துக்கு ஒரு விதமாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

புதுவையில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்கி றார்கள். தமிழகத்தில் செல் லாது என்கிறார்கள். கட்சியில் பொதுச்செயலாளர் பதவி குறித்த விவரம் தேர்தல் ஆணையம் நிலையில் இருக்கும்போது நாங்கள் யார்பக்கம் இருப்பது என்பது எங்களது உரிமை.

தமிழக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எங்கள் மீதான வழக்கை மேலும் காலதாமதம் செய்யவே இந்த நடவடிக்கை. இதன் மூலம் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை சரிந்துவிட்டது.

பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி): சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ்பெற தங்கதமிழ்செல்வன் முடிவு எடுத்திருப்பது குறித்து அவர் அளித்த பேட்டியை டி.வி.யில் பார்த்தேன்.

இதுதொடர்பாக அவரிடமும், எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரனிடமும் இன்னும் பேசவில்லை. அவர்களிடம் பேசிய பிறகு இதுபற்றிய கருத்தை தெரிவிப்பேன். என்றாலும் எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவோம். எல்லா எம்.எல்.ஏ.க்களையும் கலந்து பேசிதான் அவர் முடிவு எடுப்பார்.

பாலசுப்பிரமணி (ஆம்பூர்): எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சம்மந்தமாக நான் தனியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமை நடவடிக்கை எடுக்கும் டி.டி.வி.தினகரன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து.

ஆர்.ஆர். முருகன் (அரூர்):  சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்கதமிழ்ச்செல்வன் முடிவு எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவாகும். நான் ராஜினாமா செய்யமாட்டேன். மக்கள் நீதிமன்றத்தை நம்புவது போல நானும் நீதிமன்றத்தை நம்புகிறேன்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சட்டப்படி போராடி வெற்றி பெறுவோம். எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்): தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. 18 எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தான் கூறினோம். கட்சிக்கு எதிராக செயல்படவில்லை.

18 எம்.எல்.ஏ.க்களும் ஆளுங்கட்சி அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறோம். எங்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கட்டும் அதற்கு பிறகு முடிவு செய்வோம். கட்சியில் அடிப்படை உறுப்பினராகவும் வைத்திருக்கிறார்கள் கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் நாடகம்.

டி.டி.வி.தினகரன் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. சில நேரங்களில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார். இது ஒட்டுமொத்த 18 எம்.எல்.ஏ.க்கள் கருத்தாக ஏற்கமுடியாது.

நீதிதுறை மேல் நம்பிக்கை உள்ளது. கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 18 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். #18MLAs
Tags:    

Similar News