செய்திகள்

துப்பாக்கி சூடு - மோதல் நடந்த பகுதிகளில் நீதிபதி அருணாஜெகதீசன் கள ஆய்வு

Published On 2018-06-05 03:59 GMT   |   Update On 2018-06-05 03:59 GMT
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்று கள ஆய்வில் ஈடுபட்டுள்ள நீதிபதி அருணாஜெகதீசன் முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதியில் துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளை பார்வையிட்டார். #arunajagadeesan #Thoothukudifiring
தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணாஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

முதல்கட்டமாக தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 கட்டமாக அருணாஜெகதீசன் விசாரணை நடத்த உள்ளார். அதன்படி முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள், பலியானவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.



தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நடந்த விபரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான சிலோன்காலனி கந்தையா, புஷ்பாநகர் ரஞ்சித்குமார், மாசிலாமணிபுரம் சண்முகம் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றார். அங்கு அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் துப்பாக்கி சூடு குறித்த சம்பவங்களை தைரியமாக அச்சப்படாமல் விசாரணை ஆணையத்தில் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டார்.

அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரின்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகத்திலும், தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகத்திலும் வருகிற 30-ந்தேதி வரை பிரமாண வாக்குமூலம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை பெறுவதற்கென பிரத்யேக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிரமாண வாக்குமூலம் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட உள்ளது.

முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 2-வது கட்டமாக நீதிபதி அருணாஜெகதீசன் துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடமும் விசாரணை நடத்துகிறார்.

3-வது கட்டமாக காவல் துறையை சார்ந்தவர்கள், துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், காயமடைந்த வர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சம்பவம் நடந்தபோது பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துகிறார்.

இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணாஜெகதீசன் இன்று கள ஆய்வில் ஈடுபட்டார். முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூடு நடந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் வன்முறையால் தீவைக்கப்பட்ட வாகனங்களையும் பார்த்தார்.

பின்பு ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு சென்ற அவர் அங்கு தீவைக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். அங்கு வசிக்கும் ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து வி.வி.டி. சிக்னல் பகுதிக்கு வந்த அருணாஜெகதீசன் அங்கும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

மேலும் தீவைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனம் மற்றும் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட கடைகளையும் அவர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியையும் அவர் பார்வையிட்டார். பின்னர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிக்கு சென்று அப்பகுதியில் துப்பாக்கி சூடு, தடியடி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  #arunajagadeesan #Thoothukudifiring

Tags:    

Similar News