செய்திகள்

தாராபுரம் அருகே குளம் வெட்டியதில் முறைகேடு - லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

Published On 2018-05-30 05:03 GMT   |   Update On 2018-05-30 05:03 GMT
தாராபுரம் அருகே குளம் வெட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம் பாளையம் ஊராட்சியில் செட்டிகளம் கிராமம் உள்ளது.

இப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை தேக்கி வைக்க குளம் வெட்டி தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதற்காக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 4.96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் குளம் வெட்டப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தேக்கலூர் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் செட்டிகளம் கிராமத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ 4.96 லட்சம் செலவில் தண்ணீரை தேக்கி வைக்க குளம் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வாசித்தனர்.

இதனை கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் கிராமத்தில் குளம் எதுவும் வெட்டப்படாத நிலையில் அரசிடமிருந்து குளம் வெட்டியதாக நிதியை பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

கலெக்டர் உத்தரவின் பேரில் செட்டி களம் கிராமத்திற்கு சென்ற தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சிறைபிடித்த பொது மக்கள் வெட்டிய குளத்தை காண்பிக்குமாறு கேட்டனர்.

இதனால் பரபரப்பு உருவானது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அங்கு வந்து பொது மக்களை சமாதானம் செய்து அதிகாரிகளை விடுவித்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேங்கட லட்சுமி மற்றும் போலீசார் செட்டிகளம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உதவி பொறியாளர் பொறியாளர் ஜெயந்தி ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குளம் வெட்டியதாக முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். #tamilnews

Tags:    

Similar News