செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காட்சி.

மோதலுக்கு மத்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கிரண்பேடி பிறந்தநாள் வாழ்த்து

Published On 2018-05-29 05:29 GMT   |   Update On 2018-05-29 05:29 GMT
பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். #governorkiranbedi #CMNarayanasamy
புதுச்சேரி:

புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

அரசு மீது கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டுவதும், புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்றும் நாராயணசாமியும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

ஒரு சில சமயங்களில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைவதும் அதன் பிறகு சமாதானமாகி இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பது என வழக்கமாக இருந்து வருகிறது.



கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்ற சில நாட்களில் 2 ஆண்டுகள் மட்டுமே புதுவையில் பணிபுரிவேன் என்றும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட புதுவையில் இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது புதுவையில் தொடர்ந்து கவர்னராக பணியாற்றுவேன் என்று கிரண்பேடி தெரிவித்தார்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கவர்னர் கிரண்பேடி புதுவையில் இருந்து பெட்டி படுக்கையுடன் வெளியேற வேண்டும் என்றும், கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநிலம் ஒரு சதவீதம் கூட வளர்ச்சி அடையவில்லை என்றும் நாராயணசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும் கவர்னர் கிரண்பேடியின் அழைப்பு விடுத்த விழாவில் தன்மானமுள்ளவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் நாராயணசாமி அறிவித்தார்.

அதன்படி நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி அழைத்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை பணியை சைக்கிளில் சென்று பார்வையிடுவது வழக்கம்.

ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ்நிவாசில் இருந்து திடீரென சைக்கிளில் புறப்பட்டார். துப்புரவு பணிகளை பார்வையிட்டபடி வந்த அவர் வழியில் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

அதன் பின்னர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு கவர்னர் கிரண்பேடி வந்தார். கவர்னரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் திகைத்து போனார்கள்.

இது பற்றி வீட்டு மாடியில் இருந்த நாராயணசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது நாராயணசாமி குளித்து கொண்டு இருந்தார்.

அதுவரை கவர்னர் கிரண்பேடி வீட்டு வராண்டாவில் காத்து இருந்தார். சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு நாராயணசாமி வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

இதையடுத்து நாளை பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பதிலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து 2 ஆண்டு பணி நிறைவடைந்ததையொடடி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

இதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்றார். அங்கு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தார்.

அதே போல் சபாநாயகர் வைத்திலிங்கமும் பதிலுக்கு கவர்னர் கிரண்பேடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  #governorkiranbedi #CMNarayanasamy

Tags:    

Similar News