செய்திகள்

குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை - கைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராம மக்கள் ஓட்டம்

Published On 2018-05-11 08:42 GMT   |   Update On 2018-05-11 08:42 GMT
போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டதில் கைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
போளூர்:

சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (65), இவரும் வெங்கடேசன் (வயது51). மயிலாப்பூர் கஜேந்திரன் (55) உறவினர் மலேசியாவை சேர்ந்த மோகன்குமார் (34) சந்திரசேகர் ஆகியோரும் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

அப்போது தம்புகொட்டான் பாறை கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ருக்மணி சாக்லெட் கொடுத்தார்.

அங்கிருந்த பெண்கள், குழந்தையை கடத்த சாக்லெட் கொடுப்பதாக கருதி கூச்சல் போட்டனர். அங்கு திரண்ட கிராம மக்கள் ருக்மணி உள்பட 5 பேரையும் சரமாரி தாக்கினர். இதில் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார். மற்ற 4 பேரும் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் செல்போனில் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து மூதாட்டி மற்றும் மற்றவர்களை தாக்கியவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

அதன்படி தம்பு கொட்டான் பாறை, களியம் வேடகொள்ளை மேடு கிராமத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர்.

மேலும், சந்தேகிக்கப்படும் 200 பேரை பேலீசார் தேடி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவாகினர். கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.

அத்திமூர், கணேசபுரம், தம்புகொட்டான் பாறை, களியம், காமாட்சிபுரம், திண்டிவனம், இந்திராநகர், ஜம் பங்கிபுரம், தாளியார், காந்திநகர், ஏரிக்கொல் லைமேடு ஆகிய 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கிராமங்களில் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

போளூர் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 4 பேர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் எதுவும் ஊடுருவவில்லை. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ஆய்வு செய்ததில் குழந்தை கடத்தல் கும்பல் மாவட்டத்தில் எங்கும் இல்லை.

குழந்தை கடத்தல் கும்பல் என்று சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களும் குற்றவாளிகளாக கருதி குண்டர் சட்டம் அல்லது அதற்கு நிகரான வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.

மேலும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

Tags:    

Similar News