செய்திகள்

ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்

Published On 2018-05-05 07:07 GMT   |   Update On 2018-05-05 07:07 GMT
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டன.

ஊத்துக்கோட்டை:

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பிச்சாட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் வழியாக ஊத்துக்கோட்டையிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகண போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. பலத்த மழை பெய்யும் போது தரைப்பாலம் மூழ்கி விடுவதால் வாகன போக்கு வரத்து ரத்து செய்யப்படுகிறது. 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 60 நாட்களுக்கு தரைப்பாலம் வழியாக போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு தரைப்பாலத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அரசு மேம்பாலம் கட்ட சாத்திய கூறுகள் ஆராயும்படி நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது. அதிகாரிகள் மண் தர பரிசோதனை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்ட தமிழக அரசு ரூ. 30 கோடி ஒதுக்கியது. தற்போது மேம்பாலம் அமைக்க ஆரம்பகட்ட பணிகள் துவக்கி உள்ளது. ஓராண்டுக்குள் பணிகள் முடிய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News