செய்திகள்

உடுமலையில் குட்டையில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

Published On 2018-05-03 09:30 GMT   |   Update On 2018-05-03 09:30 GMT
உடுமலையில் திருவிழாவுக்கு வந்திருந்த அண்ணன், தம்பி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் அருகே உள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 45). மில் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (40). இந்த தம்பதிக்கு சுதர்சன் (9), ரோகித் (7) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

சுதர்சன் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பும், ரோகித் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். தற்போது பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வசந்தி பிறந்த ஊரான அதே பகுதியில் உள்ள தாந்தோணியில் பெற்றோர் ரங்கசாமி- சாந்தி ஆகியோர் வசித்து வருகிறார்கள். தற்போது அங்கு திருவிழா நடைபெற்று வருகிறது.

பள்ளி விடுமுறையை கழிக்கவும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் முதலில் வசந்தி தனது 2 மகன்களையும் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பேரன்களோடு தாத்தா ரங்கசாமியும், பாட்டி சாந்தியும் விளையாடி மகிழ்ந்தனர்.

இன்று ரங்கசாமி தோட்டத்தில் மாடுகளை மேயவிட்டிருந்தார். அப்போது சுதர்சனும், ரோகித்தும் தாத்தாவுடன் இருந்தனர். தோட்டத்தில் பண்ணை குளம் உள்ளது. ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் சேமிக்க இந்த குளம் வெட்டப்பட்டது. தற்போது 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது.

மேய்ந்த மாடுகளை பிடித்து மரத்தில் கட்ட ரங்கசாமி சென்றார். மாடுகளை கட்டிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பேரன்கள் 2 பேரையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த தாத்தாவும், பாட்டியும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். சிறுவர்கள் மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்ததும் அவர்களும் சிறுவர்களை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒருவேளை பண்ணை குட்டையில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அதில் இறங்கிய தேடியபோது சுதர்சனும், ரோகித்தும் குட்டையின் ஒரு பகுதியில் பிணமாக கிடந்தனர். குழந்தையின் உடல்களை வெளியே பொதுமக்கள் எடுத்தனர். பேரன்களின் உடல்களை பார்த்ததும் ரங்கசாமி மயக்கம் அடைந்தார்.

சிறுவர்கள் இறந்த தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பண்னை குட்டையில் மூழ்கி பலியான அண்ணன், தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்கள் இறந்தது குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மக்களின் உடலைகளை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவிழாவுக்கு வந்த சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News