அமைச்சர்-டிஜிபி பதவி விலக கோரி புதுக்கோட்டையில் தி.மு.க. போராட்டம்- 400 பேர் கைது
புதுக்கோட்டை:
குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமி ழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை திலகர் திடல் முன்பு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து புதுக் கோட்டை திலகர் திடலில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
இருப்பினும் தடையை மீறி சென்றனர். புதுக்கோட்டை மேல ராஜவீதி அருகே செல்லும் போது தி.மு.க.வினர் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 400 பேர் வரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தினால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.