செய்திகள்

பல்லாவரம் அருகே டாஸ்மாக் கடையை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய பெண்கள்

Published On 2018-04-24 11:54 GMT   |   Update On 2018-04-24 11:54 GMT
பல்லாவரம் அருகே நள்ளிரவில் பெண்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Tasmac

தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, புலி கொரடு சாலையில் புதிதாக ‘டாஸ்மாக்’ மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

நேற்று இரவு 10.30 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மதுக்கடைக்கு, மதுபாட்டில்களை லாரியில் கொண்டு வந்து ஊழியர்கள் இறக்கினர்.

இது பற்றி அறிந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

திடீரென அவர்கள் மதுக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை வெளியே விரட்டியடித்தனர். பின்னர் மதுக்கடையை அடித்து நொறுக்கினர்.

மதுபாட்டில்களை உடைத்து சாலையில் வீசி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ரூ.1½ லட்சம் மதுப்பாட்டில்கள் சேதம் அடைந்தன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, திருமுடிவாக்கத்தில் செயல்பட்ட மதுக்கடையை மூடிவிட்டு அதனை இங்கு திறக்க ஏற்பாடு நடக்கிறது. மதுக்கடை வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கேட்கவில்லை. எங்களுக்கு மதுக்கடை வேண்டாம். உடனே அகற்ற வேண்டும்” என்றனர்.

இது குறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் சிவக்குமார் சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tasmac

Tags:    

Similar News