செய்திகள்

அரசியல்வாதியை போல் திமுக மீது கவர்னர் குற்றம் சாட்டுவது அந்த பதவிக்கு அழகல்ல- திருநாவுக்கரசர்

Published On 2018-04-23 09:44 IST   |   Update On 2018-04-23 09:44:00 IST
கவர்னர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். அரசியல்வாதியை போல் தி.மு.க. மீது குற்றம் சாட்டுவது அந்த பதவிக்கு அழகல்ல என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நடுநிலையுடன் செயல்பட வேண்டியவர். ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கிறார் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை ஜனாதிபதியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனு தந்து உள்ளன.

இதில் சில கட்சிகள் கையெழுத்து போட்டன. சில கட்சிகள் கையெழுத்து போடவில்லை. தி.மு.க. ஏன் கையெழுத்து போடவில்லை?. என்பதை அவர் களிடம்தான் கேட்க வேண்டும்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கு விரோதமான நாடகங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது கனவு நிறைவேற போவதில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும்.

கவர்னர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும். அவர் மீது உள்ள விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு தி.மு.க. மீது அரசியல்வாதியை போல் குற்றம்சாட்டுவது அந்த பதவிக்கு அழகல்ல.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பார்கள். இதற்கு பொது மக்கள் ஆதரவு தரவேண்டும். சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தி இருந்தால் போராட்டங்கள் நடந்திருக்காது.

அந்த உத்தரவை மத்திய அரசு மதிக்காததால்தான் எதிர்க்கட்சிகள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எந்த ஊரில், எங்கு பயங்கரவாத முகாம் நடக்கிறது. எந்த மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு மாநில அரசுக்கு உதவ வேண்டும்.

பயங்கரவாதம் நடப்பதாக மக்களை அச்சுறுத்துவதற்கு பதிலாக அதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என தெரிவிக்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் உள்ள சிறிய கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அ.தி.மு.க.வை காணாமல் போக செய்யவே பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர யோசனை கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News