ஈரோடு அருகே 6 நாட்களாக கேட்பாரற்று நிற்கும் மர்ம வேன்
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள திண்டல் அடுத்து செங்கோடம்பள்ளம் உள்ளது. பெருந்துறை ரோட்டில் உள்ள இப்பகுதி இரவும்-பகலும் என எப்போதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெரிசலும் காணப்படும்.
இந்த நிலையில் செங்கோடம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் கடந்த 6 நாட்களாக சேலம் பதிவு எண் கொண்ட ஒரு ஆம்னி வேன் கேட்பாரற்று நிற்கிறது.
மேலும் அந்த வேனின் கதவுகள் திறந்தபடியே உள்ளது. சம்பவத்தன்று இந்த வேனில் 5 பேர் வந்துள்ளனர்.
ஆம்னி வேனை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு 5 பேரும் இறங்கினர். பிறகு அங்கு ஒரு ஆட்டோவை அழைத்து ஆட்டோ வருமா? விஜயமங்கலம் வரை போக வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் அவ்வளவு தூரத்துக்கு ஆட்டோ வராது என்று கூறி உள்ளார்.
இதனால் அவர்கள் ஒரு பஸ்சை நிறுத்தி ஏறி சென்று விட்டனர். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறினர்.
விஜயமங்கலம் போக வேண்டிய அவர்கள் வேனிலேயே போய் இருக்கலாமே? எதற்காக ஆட்டோ கேட்டுள்ளனர்? பிறகு ஏன் வேனை நிறுத்தி விட்டு பஸ்சில் சென்றுள்ளனர்? என்பது மர்மமாக உள்ளது.
வேனில் இருந்து வந்தவர்கள் அந்த வேனை எங்கிருந்தாவது கடத்தி கொண்டு வந்தார்களா? வழியில் ஈரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
6 நாட்களாக செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தத்திலேயே அந்த வேன் நிற்பது பற்றி இன்னும் யாரும் கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை.
எல்லைக்குட்பட்ட ஈரோடு தாலுகா போலீசாருக்கும் அந்த மர்ம ஆம்னி வேன் கண்ணில் படவில்லை. அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றால் கூட இந்த மர்ம வேன் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருப்பார்கள்.
இனியும் காலம் தாழ்த்தாமல் போலீசார் அந்த மர்ம வேன் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். #tamilnews