தமிழகத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது- பொன்முடி பேச்சு
சீர்காழி:
சீர்காழி நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா.முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், ரவிக்குமார், மலர்விழி, நகர துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.என்.ஆர்.ரவி, மாவட்ட அமைப்பாளர்கள் முத்து குபேரன், கலைவாணன்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், விஜயேஸ்வரன், முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்றார்.
மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம்.கல்யாணம், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கட்சியினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
வளர்கிற இளைஞர்களுக்கு திராவிட இயக்க உணர்வுகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்திலே இளைஞர் எழுச்சிநாள் விழா கொண்டாடப்படுகிறது. இளைஞர்களுக்கு இளமையிலேயே அரசியல் உணர்வு வரவேண்டும். மாணவர்கள் அரசியலில் சுவற்றில் அடித்த பந்தாக இருக்கவேண்டும், சேற்றில் அடித்த பந்தாக இருக்ககூடாது என கருணாநிதி அப்போதே கூறியுள்ளார்.அவ்வாறு மாணவர்கள், இளைஞர்கள் அரசியலை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தற்போது சிலர் நான் தான் அடுத்த முதல்வர் என்ற கனவோடு அரசியலுக்கு வருகின்றனர். திராவிட இயக்கம் கொடுத்த உணர்வுகளின் அடிப்படையில்தான் பெண்கள் படித்தார்கள். பெண்களுக்கு சொத்துரிமை, சமஉரிமை,தேர்தலில் 33சதவீத இடஒதுக்கீடு கிடைத்திட காரணம் திராவிட இயக்கம் தான். தற்போது மருத்துவஇடங்களில் நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை திணிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் ஒரே இயக்கம் திமுகதான். நீட்தேர்வை, ஜல்லிகட்டு ஆகிய பிரச்சனைக்கு உணர்வுடன் போராடிய மாணவர்கள் காவிரி நதிநீர் பிரச்சனைக்கும் போராடவேண்டும்.
தமிழ்நாட்டில் நாடக ஆட்சிதான் நடக்கிறது. சட்டமன்றத்தில் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து கையெழுத்து பெற்றால் தான் மத்தியஅரசிற்கு அழுத்தம் தரமுடியும். மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு முடிவடைந்த பிறகு தற்போது மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தை மிக தாமதமாக நாடுவது மக்களை ஏமாற்றும் செயல்.
பா.ஜ.க. என்றைக்கும் தமிழகத்தில் நுழைய முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி ஆளுனருக்கு எந்த அதிகாரமும் கிடையாது ஆனால் தமிழகத்தில் ஆளுனர் மாவட்டங்களை ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நியாயமாக நடக்கவில்லை என்று பேசினார்.
முடிவில் நகர இளை ஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.