செய்திகள்
செ.மாதவன்

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் மரணம்

Published On 2018-04-04 08:17 IST   |   Update On 2018-04-04 08:17:00 IST
தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செ.மாதவன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
சிங்கம்புணரி:

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செ.மாதவன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கடந்த ஒருவார காலமாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார்.

நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 85.

மாதவன் 1933-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி பிறந்தார். கடந்த 1962-ம் ஆண்டு அப்போதைய திருக்கோஷ்டியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்பு மாற்றியமைக்கப்பட்ட திருப்பத்தூர் தொகுதியில் 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.யாக இருந்தார். இந்த 3 முறையும் தி.மு.க. சார்பில் அவர் போட்டியிட்டு வென்றிருந்தார்.

பின்னர் தி.மு.க.வில் இருந்து விலகிய மாதவன், 1982-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 1984-ம் ஆண்டு அதே திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 4-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

1990-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க. பொருளாளராக பணியாற்றியுள்ளார்.

அ.தி.மு.க. 2 ஆக பிரிந்தபோது ஜானகி அணியில் மாதவன் இணைந்தார்.

1996-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அண்ணா, கருணாநிதி அமைச்சரவைகளில் மாதவன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மாதவன் உடல் அடக்கம் இன்று மாலை 3 மணிக்கு வேங்கைப்பட்டி சாலையில் உள்ள பொது மயானத்தில் நடைபெற உள்ளது. சிங்கம்புணரி அண்ணா மன்றம் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் நடைபெறுகிறது.

மாதவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிங்கம்புணரி பகுதியில் வணிகர் சங்கங்கள் சார்பில் இன்று(புதன்கிழமை) ஒருநாள் கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவன் மறைவுக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு சிங்கம்புணரிக்கு வரும் மு.க.ஸ்டாலின், மாதவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.  #tamilnews

Similar News