செய்திகள்

வே‌ஷம் போடுவோரை மக்கள் அறிவர் -திண்டுக்கல் சீனிவாசன் மீது எச்.ராஜா பாய்ச்சல்

Published On 2018-03-25 22:00 IST   |   Update On 2018-03-25 22:00:00 IST
வே‌ஷம் போடுவோர் யார்? என மக்கள் அறிவார்கள் என்று பா.ஜ.க. கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் வந்த பா.ஜ.க. கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்து மத யாத்திரைகளால் ஒருபோதும் கலவரம் வந்தது இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக தமிழக கோவிலில்களில் ரூ.பல லட்சம் கோடி சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அங்குள்ள நரசிம்ம கோவில் நிலத்திலும், கோவை கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி, திருவண்ணாமலை அருணாச்சலஈஸ்வரர் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. இதுபோன்று கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் வெளிப்படையாக கூறுவதால் என்னை குறி வைக்கின்றனர்.

தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்பவர்கள் ஒரு அணையை கூட கட்ட முடியவில்லை. இதனால் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனை மூடி மறைப்பதற்காக காவிரி மேலாண்மை வாரியத்திற்கு குரல் கொடுக்கின்றனர்.

கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்துதான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது குறித்து கேட்டபோது யார்? வே‌ஷம் போடுகிறார்கள் என மக்களுக்கு தெரியும் என்றார்.

Similar News