செய்திகள்

ஜெயேந்திரர் உடல் சங்கர மடத்தில் நல்லடக்கம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

Published On 2018-03-01 05:05 GMT   |   Update On 2018-03-01 05:05 GMT
சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் பெரியவர் சமாதியின் அருகில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகெண்டார். #Kanchishankaracharya #JayendraSaraswathi
காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் (வயது 82) நேற்று காலை காலமானார். மடத்தில் வழக்கமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றி நிறைய விபூதி பூசப்பட்டு, குங்கும பொட்டு வைக்கப்பட்டு இருந்தது.

ஜெயேந்திரரின் உடலுக்கு அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். ஜெயேந்திரர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்துக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பக்தர்கள் அவரது உடல் அருகில் நின்று விஷ்ணு சகஸ்ரநாம மந்திரத்தை பக்தி பரவசத்துடன் பாடினார்கள்.

தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஜெயேந்திரரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.



இன்று காலை வேத முறைப்படி ‘பிருந்தாவன பிரவேச காரிய கிரமம்’ என்று அழைக்கப்படும் இறுதிச்சடங்கு தொடங்கியது. முதலில் ஜெயேந்திரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் அவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டார்.

இறுதிச்சடங்கு முடிந்ததும் ஜெயேந்திரர் உடல் மடத்தில் உள்ள பிருந்தாவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதியின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதகளிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வருகை தந்ததால் காஞ்சிபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.  #Kanchishankaracharya #JayendraSaraswathi #tamilnews
Tags:    

Similar News