செய்திகள்

முதியோர் இல்லத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு

Published On 2018-02-22 13:37 IST   |   Update On 2018-02-26 08:57:00 IST
பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் இன்று 2-வது நாளாக வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ தலைமையில் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்ற முதியோர்களை பராமரிக்கும் புனித ஜோசப் ஹாஸ்பீஸஸ் என்ற தனியார் கருணை இல்லம் உள்ளது.

நேற்று முன்தினம் இந்த கருணை இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டைகளுடன் ஆண் பிணம் கொண்டு வரப்பட்டது. அதனுடன் திருவள்ளூரை சேர்ந்த அன்னம்மாள், திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.

இதனால் பயந்தபோன அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் வேனை மடக்கி பிடித்து சாலவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்த விஜயகுமாரின் உடலை பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு கொண்டு சென்றதும் அப்போது தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் உள்ள அதே கருணை இல்லம் கிளையில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாளை பிணத்துடன் அதே வேனில் அழைத்து வந்ததும் தெரிந்தது.

இது தொடர்பாக வேன் டிரைவர் ராஜேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலேஸ்வரத்தில் உள்ள இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் எலும்புகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து நேற்று காலை காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆய்வு செய்தனர்.

அங்கு 340 முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்களிட மும் கருணை இல்ல நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இறந்தவர்களின் உடல்களை வைக்கும் பெரிய கட்டிடம் இருப்பதை கண்டு பிடித்தனர்.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 60 பேர் மர்மமாக இறந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தங்கி இருந்த முதியவர்கள் தங்களை வெளியே விட மறுப்பதாக அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இதுபற்றி முழுமையான விவரத்தை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ தலைமையில் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருணை இல்ல நிர்வாகி தாமஸ் கூறியதாவது:-

கருணை இல்லம் முறையாக அனுமதி பெற்றே இயங்குகின்றது. ஆதரவற்ற அனாதைகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படு கின்றது. சிகிச்சை பலனின்றி இறப்பவர்கள் உடல்கள் புதைக்கப்படுவதில்லை, எரிக்கப்படுவதில்லை மாறாக நவீன முறையில் அடக்கம் செய்யப்படுகின்றது. அரசின் எந்தவிதமான விசாரணைக்கும் நாங்கள் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜி கூறும்போது, ‘இந்த கருணை இல்லத்தில் காவல், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரசு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்தும், அவர்களின் பெயர், வயது, இங்கு எப்போது அழைத்து வரப்பட்டார்கள் என்பது குறித்து அவர்களிடமே கேட்டு விபரங்கள் பெறப்பட்டு தவறு நடந்து இருந்தால் அது குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா கூறுகையில், ‘இந்த கருணை இல்லத்தின் லைசென்ஸ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே காலாவதி ஆகி விட்டது. பிறகு லைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பித்து உள்ளார்கள் அது பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதற்கான ஆய்வு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. #tamilnews

Similar News