செய்திகள்

நாகை மாவட்டத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை வருகை

Published On 2018-02-16 03:59 GMT   |   Update On 2018-02-16 04:07 GMT
நாகூர் பெரிய ஆண்டவரின் கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை நாகை மாவட்டத்திற்கு செல்கிறார்.
நாகப்பட்டினம்:

நாகூர் ஆண்டவர் தர்காவில் 461-வது பெரியகந்தூரி விழா நாளை (17-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று நாகூர் ஆண்டவர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முகம்மது கலிபா ஷாகிப் கடந்த மாதம் சென்னை ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட தமிழக கவர்னர் வருகிற 18-ந்தேதி கந்தூரி விழாவில் கலந்து கொள்கிறார்.

அவர் நாளை (17-ந்தேதி) காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் மூலம் சிதம்பரத்திற்கு வருகிறார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

காலை 9.45 மணி அளவில் சுவாமி சஹஜானந்தா ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து 10.30 மணி அளவில் புறப்படும் கவர்னர் 10.45 மணி அளவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழா முடிந்தவுடன் மாலை 5 மணி வரை ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நாட்டியாஞ்சலி பரதநாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அங்கிருந்து புறப்படும் அவர் நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இரவு நாகை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதைத்தொடர்ந்து மாலை 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நாகப்பட்டினம் சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனு பெறுகிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு வேளாங்கண்ணி பேராலயத்திற்கு செல்கிறார். அங்கிருந்து புறப்படும் கவர்னர் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நாகூர் பெரிய ஆண்டவரின் கந்தூரி விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவு 9.30 மணி அளவில் சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்து வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News