செய்திகள்

மதுரை அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

Published On 2018-02-09 11:14 IST   |   Update On 2018-02-09 11:14:00 IST
மதுரை அருகே இன்று அதிகாலை கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

திருவாரூர் மாவட்டம், மாவூர் அருகே உள்ள குன்னியூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 42). இவர் லாரிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவருடன் ஆதமங்கலத்தைச் சேர்ந்த சேவியர் (49), மங்கப்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கசாமி (60) ஆகியோரும் இதே பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வேலை வி‌ஷயமாக இவர்கள் 3 பேரும் திருவாரூரில் இருந்து நேற்று இரவு காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை அருகே உள்ள துவரிமான் 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.

அந்த சமயத்தில் எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த லாரன்ஸ், ரங்கசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

படுகாயம் அடைந்த சேவியரை அந்தப் பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News