செய்திகள்

புதுக்கோட்டை அருகே கார் மீது லாரி மோதல்: டாக்டர்-நண்பர் உள்பட 3 பேர் பலி

Published On 2018-02-05 10:34 IST   |   Update On 2018-02-05 10:34:00 IST
கந்தர்வக்கோட்டை அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் டாக்டர் மற்றும் அவரது நண்பர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 38). ஓமியோபதி டாக்டரான இவர் அதே பகுதியில் மருத்துவமனை வைத்துள்ளார்.

இவரது நண்பர் உதயகுமார். இவர்கள் இன்று காலை சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி காரில் சென்றனர். காரை புதுக்கோட்டை கம்பன் நகரை சேர்ந்த டிரைவர் கனகராஜ் (40) ஓட்டிச்சென்றார்.

அவர்களது கார் இன்று காலை 6 மணியளவில் கந்தர்வக்கோட்டையை அடுத்த வளவம்பட்டி அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி பிரிவு ரோடு பகுதியில் சென்றது. அதே நேரத்தில் தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அதிக வேகத்தில் வந்த காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் நொறுங்கியது. காரின் மேற்பகுதியே இல்லாத நிலை ஏற்பட்டது.

காருக்குள் இருந்த டாக்டர் சுந்தர்ராஜ், அவரது நண்பர் உதயகுமார், டிரைவர் கனக ராஜ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் அருகே உள்ள ஆதனக்கோட்டை மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும் ஆதனக்கோட்டை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களை இரும்புக்கம்பியால் உடைத்து பெரும் சிரமத்திற்கிடையே மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மஞ்சப் பேட்டையை சேர்ந்த மணிகண்டனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்து காரணமாக தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  #tamilnews

Similar News