செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை

Published On 2018-01-29 12:33 IST   |   Update On 2018-01-29 21:31:00 IST
நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் 120 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் ராமன் புதூர் கவிமணிநகரை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலையில் ஊர் திரும்பிய மோகன் தாஸ் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அவரது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது.

அவர் பீரோவில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த பணமும் மாயமாகி இருந்தது. அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

மோகன்தாஸ் தனது மகளின் திருமணத்திற்காக அந்த நகைகளை வாங்கி வைத்திருந்தார். அந்த நகைகள்தான் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

மோகன்தாஸ் முதலில் மண்டைக்காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தற்போது அவரது மகன் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார். மகனின் படிப்புக்கு வசதியாக கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அவர் நாகர்கோவில் கவிமணி நகரில் உள்ள வீட்டிற்கு குடிவந்துள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மோகன் தாஸ் வெளியூர் சென்று இருந்ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருந்தது தெரியவந்தது.

மோப்ப நாயை வரவழைத்தும் போலீசார் துப்புதுலக்கினார்கள். கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்ற மோப்ப நாய் மீண்டும் வீட்டிற்கே திரும்பி விட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அந்த வீட்டிற்கு சென்று வீட்டின் பின்பக்க கதவு மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் துப்புதுலக்க உள்ளனர். வீடுகள் நெருக்கமாக உள்ள கவிமணிநகரில் 120 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Similar News