செய்திகள்

ஜெயலலிதா மரணம்: சசிகலாவுக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியும் - வைகோ

Published On 2018-01-18 09:41 GMT   |   Update On 2018-01-18 09:41 GMT
ஜெயலலிதாவின் மரணத்தில் அனைத்து உண்மைகளும் சசிகலாவுக்குத்தான் தெரியும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

புதுக்கோட்டை:

ஆலங்குடியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ உயர் படிப்பிற்காக டெல்லி செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதுவரை 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஒரு மருத்துவ இடம் காலியாகிறது என்று நினைத்து சிலர் செய்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வாய் திறக்காமல் மவுனம் சாதிப்தோடு கவலையும் படாமல் இருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து திவாகரன் காலையில் ஒன்று பேசுகிறார், மாலையில் ஒன்று பேசுகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் அநாகரீகமாக பேசி வருகிறார். இருப்பினும் 24 மணி நேரமும் ஜெயலலிதாவோடு உடன் இருந்தவர் சசிகலா மட்டும்தான். அவருக்குத்தான் ஜெயலலிதாவின் மரணத்தில் அனைத்து உண்மைகளும் தெரியும். இதுகுறித்து அவர் தான் பதில் கூறமுடியும்.

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு இஸ்லாமியர்களின் உணர்வை புறந்தள்ளியுள்ளது. ஏற்கனவே முத்தலாக் விவகாரத்திலும் சரி, தற்போது ஹஜ் புனித பயண மானிய ரத்து விவகாரத்திலும் சரி இஸ்லாமிய தலைவர்களோடு கலந்து ஆலோசிக்காமல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் இதற்கு மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு செய்து இருக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் 54 ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து உள்ளேன். ஆனால் தற்போது மாற்றத்தை கொண்டு வருவேன் என்று ரஜினி, கமல் கூறி அரசியலுக்கு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்து பார்த்தால்தான் அதனுடை சூழல் பற்றி புரியும். அவர்களது வெற்றி குறித்து காலம் தான் பதில் கூறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews

Tags:    

Similar News