செய்திகள்

திருப்புவனம் அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு

Published On 2018-01-12 09:42 IST   |   Update On 2018-01-12 09:42:00 IST
இந்து மக்கள் கட்சியின் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, புலியூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல அமைப்பு தலைவராக இருந்து வருகிறார். ஏற்கனவே இவருக்கு சிலர் மிரட்டல் விடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று பாலமுருகன் வீட்டு முன்பு போலீஸ்காரர் சத்தியமூர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பாலமுருகன் வெளியூர் சென்று விட்டதால் அவரது மனைவி அழகுசாரதி, தந்தை சண்முகம், சகோதரர் ஆனந்தவேலு, அவரது மனைவி சுபா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் பயங்கர சத்தம் கேட்டது. உடனே போலீஸ்காரர் சத்தியமூர்த்தி மற்றும் பாலமுருகனின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அங்கு பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் பாலமுருகனின் வீட்டுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

சிதறிக் கிடந்த பெட்ரோல் குண்டுகளின் சிதறல்களை போலீசார் சேகரித்தனர். எரிந்து சேதம் அடைந்த மோட்டார் சைக்கிளையும் ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். #TamilNews

Similar News