காஞ்சீபுரம் பஸ் நிலையத்துக்குள் தாறுமாறாக ஓடிய கார் பஸ் மீது மோதியது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பஸ் நிலையத்துக்குள் மூத்த குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் தவிர்த்து பிற வாகனங்கள் நுழைய காவல் துறையினர் தடை விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலூரில் இருந்து காஞ்சீபுரம் வந்த கார் ஒன்று தடையை மீறி காஞ்சீபுரம் பஸ் நிலையம் உள்ளே நுழைந்தது.
திடீரென கார் தாறுமாறாக ஓடி தற்காலிக டிரைவர் இயக்கி வந்த அரசு பஸ் மீது மோதி நின்றது. இதில் காரின் பக்கவாட்டு பகுதி சிறிது சேதம் அடைந்தது.
காரில் இருந்து இறங்கிய அதன் உரிமையாளர் அரசு பஸ்சினை ஓட்டியதற்காலிக டிரைவரிடம் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 7500 ரூபாய் தரும்படி மிரட்டினார். இதனையடுத்து அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
பஸ் நிலையம் உள்ளேயே பணிமனை அமைந்திருந்தும் பணிமனை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் யாரும் அரசு பேருந்தின் தற்காலிக ஓட்டுனருக்கு ஆதரவாகப் பேச வரவில்லை.
மேலும் தடையை மீறி பேருந்து நிலையம் உள்ளே கார் ஏன் வந்தது என்ற கேள்வியையும் கேட்க வில்லை. அடாவடியாகப் பேசிய காரின் உரிமையாளர் தற்காலிக பேருந்து ஓட்டுனரிடம் 7500 ரூபாய் பெற்ற பின்னரே அங்கிருந்து பஸ்சை எடுக்க அனுமதித்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதியினைக் குறைக்க தற்காலிக ஓட்டுனர்கள் பணிக்கு வருகின்றனர், இதற்கு அவர்கள் சொற்பமான அளவிலேயே வருமானம் பெறுகின்றனர்.
ஆனால் தடையினை மீறி பேருந்து நிலையத்தில் புகுந்த காரின் உரிமையாளர் அவரிடமே பணம் பெற்ற சம்பவமும் அதனை அரசு போக்குவரத்து அலுவலர்கள் காவல் துறையினர் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த சம்பவமும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews #kanchipurambusstand