செய்திகள்
எச்.ராஜா வீட்டை முற்றுகையிடுவதற்காக நாம் தமிழர் கட்சியினர் வந்த காட்சி.

காரைக்குடியில் எச். ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

Published On 2018-01-10 14:55 IST   |   Update On 2018-01-10 14:55:00 IST
கவிஞர் வைரமுத்துவை தரக்குறைவாக பேசியதை கண்டித்து காரைக்குடியில் இன்று எச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:

கவிஞர் வைரமுத்துவை தரக்குறைவாக பேசியதாக கூறி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இதையொட்டி காரைக்குடியில் உள்ள எச். ராஜா வீட்டின் அருகில் இன்று, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் எச். ராஜா வீட்டில் 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. வினர் திரண்டிருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் எச். ராஜா வீட்டை முற்றுகையிட திரண்டு வந்தனர். வீடு அருகில் வந்ததும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் சிலர், போலீஸ் தடுப்பையும் மீறி எச். ராஜா வீட்டை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #TamilNews

Similar News