செய்திகள்
ராமாமிர்தம்

ஜெயங்கொண்டம் அருகே பெரியப்பாவை அடித்து கொன்ற வாலிபர் கைது

Published On 2017-12-27 09:38 IST   |   Update On 2017-12-27 09:38:00 IST
ஜெயங்கொண்டம் அருகே முன்விரோதத்தில் பெரியப்பாவை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த சாமி மகன் ராமாமிர்தம் (வயது 65). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்களுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். ராமாமிர்தம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக மீண்டும் பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு வந்துவிட்டார்.

இதற்கிடையே இவருடைய பாக நிலம் மற்றும் மனைகளை இவரது தம்பி இளை பெருமாள் மகன் சரவணன் ஆண்டு அனுபவித்து வந்துள்ளார். அவரிடம், நான் இனி எனது நிலத்தில் விவசாயம் செய்து கொள்கிறேன் என ராமாமிர்தம் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் சரவணனின் தந்தை இறந்தபோது ராமாமிர்தம் துக்க காரியத்திற்கு செல்லாமல் ஒதுக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சரவணனுக்கும், ராமாமிர்தத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரிய கிருஷ்ணாபுரம் கோவில் அருகேயுள்ள ஆலமரத்தின் கீழ் ராமாமிர்தம் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த சரவணன் ராமாமிர்தத்திடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ராமாமிர்தத்தின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

இதில் மண்டை உடைந்து ராமாமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்திற்கு சென்று ராமாமிர்தத்தின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News