செய்திகள்

அரியலூர் வங்கியில் கொள்ளை முயற்சி: லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.15 கோடி நகைகள் தப்பியது

Published On 2017-12-27 08:37 IST   |   Update On 2017-12-27 08:37:00 IST
அரியலூரில் உள்ள வங்கியில் மர்ம மனிதர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.15 கோடி நகை தப்பியது.
அரியலூர்:

அரியலூரில் லெட்சுமி விலாஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. 22-ந் தேதி வங்கி பணிகளை முடித்து விட்டு வங்கி மேலாளர் விஸ்வநாத் மற்றும் ஊழியர்கள் வங்கியை பூட்டினர்.

இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கியை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கதவின் உள்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர், இரும்பு கதவு வழியாக வங்கியின் உள்பகுதியை பார்த்த போது, அங்கிருந்த ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது.

அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர், இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். அப்போது வங்கியில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

இதையடுத்து நகை-பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை பார்த்த போது, அதனை கொள்ளையர்கள் உடைக்க முயற்சி செய்து இருந்தது தெரியவந்தது. இதனால் ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளும், ரூ.8 லட்சம் ரொக்கமும் லாக்கரில் இருந்து கொள்ளை போகாமல் தப்பியது.

பின்னர் வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்து கொண்டு ஒரு நபர், கையில் டார்ச் லைட்டுடன் உள்ளே நடமாடியது தெரிய வந்தது. எனவே அந்த நபர் உள்பட சிலர் சேர்ந்து தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து பார்க்கையில் 24-ந் தேதி அதிகாலையில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு நகைகள் அடகு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலர் வங்கி முன்பு குவிந்தனர். அப்போது போலீசாரும், வங்கி நிர்வாகத்தினரும் கொள்ளை ஏதும் நடக்கவில்லை என்பது குறித்து விளக்கி கூறினர். அதன் பின்னரே வாடிக்கையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Similar News