செய்திகள்
உசிலம்பட்டி அருகே விவசாயிகள் மதுரை-தேனி மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்- கைது

Published On 2017-12-25 16:52 IST   |   Update On 2017-12-25 16:52:00 IST
விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி:

வடகிழக்கு பருவமழையால் இந்த ஆண்டு வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதையடுத்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி பகுதியில் உள்ள திருமங்கலம் பிரதான கால்வாயில் திறந்து விடப்படும் வைகை நீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஆண்டு அணை திறக்கப்பட்ட தொடக்கத்தில் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை நம்பி அப்பகுதி விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை மேற்கொண்டனர். ஆனால் 10 நாட்களில் திருமங்கலம் பிரதான கால்வாயில் எந்தவித முன்னறிவிப்புமின்றி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் குப்பணம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர்கள் பூமிநாதன், ராதாகிருஷ்ணன், கோவிந்தராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குப்பணம்பட்டி மதுரை- தேனி நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் தண்ணீரை உடனே திறக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

திடீர் சாலைமறியலால் மதுரை-தேனி சாலையில் இருபுறமும் பலகிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத் தினர். மறியலை கை விட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மறியல் காரணமாக 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Similar News